தலையங்கம்
தலையங்கம்:பேரபாயம் காத்திருக்கிறது...!
First Published : 09 Mar 2010 12:48:00 AM IST
Last Updated : 09 Mar 2010 02:48:57 PM IST
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?
அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?
இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.
இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.
இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.
இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக