சென்னை மூலம் நாட்டில் பரவும் சீன போலி மருந்து
ஜூன் 18, 2009
சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் ஆப்ரிக்காவில் போலி மருந்து விற்பனை செய்த சீனா,
சென்னை துறைமுகம் வழியாக இந்தியாவுக்கும் போலி மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் சென்னையில் துறைமுக பணியில் இருக்கும் துணை மருந்து கண்காணிப்பாளர் சாந்தி குணசேகரன் என்பவர் மூன்று போலி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை துறை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருந்துகளை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொல்கத்தாவில் இருக்கும் மத்திய அரசின் சோதனை கூடத்துக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து என்வீ டிரக்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு பொறுப்பாளர் ராகேஷ் ஜெயின் கூறுகையில், எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த மருந்து பொருட்கள் எங்களது பெயருக்கு தான் வந்திருக்கிறது என்றாலும், அதை நாங்கள் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. ஒரு மும்பை நிறுவனத்தின் மூலம் தான் பெறுகிறோம். எங்களுக்கு சீன ஏற்றுமதியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் எங்கள் மீது எந்த குற்றமுமி்ல்லை என்றார் அவர்.
ஷீதல் பார்மா நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ் ஷா கூறுகையில், இந்த மருந்துகள் இந்தியா மற்றும் சீன துறைமுகங்களில் சோதனையிட்ட பின்னர் தான் வருகிறது. ஆனால் அதையும் மீறி எப்படி வருகிறது என்பது தெரியவில்லை. எங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை என்றார்.
இது குறித்து குஜராத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர் ஒருவர் கூறுகையி்ல், மருந்து பொருட்களை சிறு தொழிலாக செய்து வரும் நிறுவனங்கள் எதுவும் நேரிடையாக இறக்குமதி செய்வதில்லை. நாங்கள் மும்பையில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறோம். அவர்கள் கொடுக்கும் மூலப்பொருட்களை கொண்டு நாங்கள் மருந்து தயாரிக்கிறோம். அவர்கள் கொடுப்பது போலியாக இருந்தால் பல மருந்து நிறுவனங்களும் போலி மருந்துகளை தயாரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்றார்.
ஸ்வைன் மருந்து 'டமிஃப்ளூ' குழந்தைகளுக்கு அபாயகரமானது!
புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 2009
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள மாத்திரையான டமிஃப்ளூ, குழந்தைகளுக்கு அபாயகரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த மாத்திரை குழந்தைகளுக்கு அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், டமிஃப்ளூவால் பல்வேறு சிக்கல்களை குழந்தைகள் சந்திப்பதாக ஆய்வுகளும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலைக் கொண்டு வரக் கூடிய அபாயமும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பானில், இந்த மாத்திரைகளை உட்கொண்ட நோயாளிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்ததாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.
இதனால்தான் இந்தியாவில் இந்த மாத்திரிகளை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அரசும் கூட இதை தற்போது குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது. சில்லறை விற்பனைக்கும் தடை உள்ளது என்றார்.
இருப்பினும் விரைவில் சில்லறை விற்பனைக்கு டமிஃப்ளூவை திறந்து விட அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.
போலி மருந்து மாத்திரையால் சிறுமி சாவு
மார்ச் 23, 2010
சென்னையில்
காலாவதியான மருந்து மாத்திரைகளை புத்தம் புதிய மருந்து மாத்திரைகள் போல் தயாரித்து விற்றதால் கீர்த்தி தேவ தர்ஷினி என்ற 3 வயது சிறுமி பலியானள்.
காலாவதியான மருந்து, மாத்திரைகள் தீ வைப்பு
மார்ச் 25,2010
சேலத்தில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை, ஓலையில் போட்டு எரித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். தமிழகத்தில், பரவலாக மருந்து கடைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்வதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. சென்னையில், காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த மேலும் ஏழு பேர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மருந்து விற்பனையாளர்கள் உஷார் அடைந்துள்ளனர். கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை மூட்டை கட்டி, குவியல் குவியலாக குப்பை தொட்டிகளில் வீசி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் நகரில், ஏழு மூட்டைகளில், காலாவதியான மருந்து, மாத்திரைகளை கட்டி மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது. அதில், மூன்று மூட்டைகளில் இருந்த மருந்து, மாத்திரைகளை கீழே கொட்டி, ஓலையை போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளது. மருந்து, மாத்திரைகளின் பெயர் மற்றும் காலாவதியான குறிப்பு கிடைத்து விடக்கூடாது என்பதால், இவ்வாறு எரித்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார், மூட்டைகளில் இருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை கைப்பற்றினர். அவற்றை வீசிய மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம், மேட்டூர் ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகிலுள்ள குப்பை வண்டியில், காலாவதியான மருந்து, மாத்திரைகள், காலாவதி தேதி குறிப்பிடாத டானிக், சாம்பிள் மருந்துகள் பெட்டி பெட்டியாக வீசப்பட்டிருந்தது. அதில், பெரும்பாலானவை குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், இருமல், சளி தீர்ப்பதற்கான மருந்துகள். ஈ.எஸ்.ஐ ., (தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம்) சேலம் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் சம்பத்குமார், இவற்றை ஆய்விற்காக எடுத்து சென்றார்.
சில நாட்களுக்கு முன், கோவையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து 500 பாட்டில்களில் இருமல் மருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது. பெட்டியில் 60 பாட்டில்கள் இருப்பதற்கு பதில், 100 பாட்டில்கள் இருந்ததால், மருந்து கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்தனர். இதைதொடர்ந்து, 400 பாட்டில்களை கோவை டீலருக்கு திருப்பி அனுப்பினர். மருந்து ஆய்வாளர்கள் 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் குப்பையில் கொட்டப்பட்ட மாத்திரைகள்: 10 ஆண்டுகள் பழையது
மார்ச் 25, 2010
சேலத்தில் காலாவதி ஆன மாத்திரைகள் புதன்கிழமை குப்பையில் கொட்டப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரு கும்பல் காலாவதி ஆன மருந்து, மாத்திரைகளை சேகரித்து, புதியது போல் மாற்றி மருந்து கடைகளில் விற்பனை செய்து வந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் கிடங்குகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து காலாவதி ஆன மருந்துகளை வியாபாரிகள் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சுபாஸ் சந்திரபோஸ் நகரில் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான காலாவதி ஆன மாத்திரைகள் கிடப்பதை அப்பகுதி மக்கள் புதன்கிழமை காலை கண்டுபிடித்தனர். இது குறித்துஅன்னதானப்பட்டி போலீஸýக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலி, காலாவதி மருந்துகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதால் பயந்து போன யாரோ சிலர் அனாசின், புளுகிளாக்ஸ்-500, போஸ்-40, காஸ்காக்ஸ், டிரோபிள், சிபோ, மூவன் போன்ற பெயர் கொண்ட மூன்று மூட்டை மாத்திரைகளை இரவில் கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் குறைவான இப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் அருகில் இரண்டு இடங்களில் தனித் தனியாக உதிரி கேப்சூல்கள், மாத்திரைகள், களிம்பு மருந்துகள் கிடந்தன. இவை யாவும் 1991, 1998, 2001, 2003 ஆகிய ஆண்டுகளிலேயே காலாவதி ஆகிவிட்டவை என்பது அதன் மேல் உறைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவற்றை இவ்வளவு நாள்களாக வைத்து வியாபாரம் செய்துள்ள மர்ம நபர்கள் அதிகாரிகளுக்கு பயந்து இப்போது இங்கு வந்து போட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அங்கிருந்த ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி விமலன் தெரிவித்தார். மாத்திரைகள் கொட்டப்பட்டு இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜதுரை, இந்திரா மற்றும் போலீஸôர் அவற்றை மூட்டை கட்டி ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்த உதிரி மாத்திரைகளை தீ வைத்து போலீஸôர் எரித்தனர்.
போலி மருந்து இல்லை: சேலம் மண்டலத்தில் போலி மருந்து, மாத்திரைகள்இல்லை என்று மருந்து கட்டுப்பாடு துணை இயக்குநர் செல்வராஜ் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியது: போலி மருந்துகள், காலாவதி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதால் பயந்து போன சிலர் தங்கள் கைவசம் இருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை மேட்டூர், சீலநாயக்கன்பட்டியில் கொட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த இரண்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மேட்டூரிலும், மற்றொருவர் சீலநாயக்கன்பட்டியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.
போலி மருந்து: மக்கள் பீதியடைய வேண்டாம் என அரசு வேண்டுகோள்
மார்ச் 25, 2010
எல்லா மருந்து கடைகளிலும் விற்கும் மருந்துகளும் போலியானவை அல்ல என்று தெரிவித்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ், இதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அவர், காலாவதியான தேதியை பெரிய எழுத்தில் அச்சிட மருந்து உற்பத்தியாளர்களிடம் வலியுறுத்தப்படும் என்றார்.
மருந்து வாங்கும்போது தேதி முடிந்துள்ளதா என்பதை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் என்று கூறிய சுப்புராஜ், கடைகளில் காலாவதியான மருந்து வைத்திருந்தால் குற்றமல்ல, இதனை விற்பனை செய்யக்கூடாது என்றார்.
கூடுதலாக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், சென்னையில் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்றார்.
போலீஸ் ரெய்டு எதிரொலி: வேலூர், நெல்லையில் போலி மருந்துகள் எரிப்பு!
மார்ச் 25, 2010
சென்னை: காலாவதியான மருந்துகள் புதுப்பித்து விற்கப்படும் மோசடி அம்பலமானதை அடுத்து தமிழகம் முழுவதும் பல நகரங்களிலும் மருந்து கடை மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக வேலூர் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் பல லட்சம் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இவற்றை எரித்தவர்கள் யார் என கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்திரை மற்றும் மருந்துகளின் காலாவதி தேதியை அழித்துவிட்டு போலியாக புதிய தேதி அச்சிட்டு ஆபத்தான வகையில் மோசடி விற்பனை சென்னையில் நடந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
காலாவதியான மருந்து மாத்திரைகளை கொடுங்கையூர் குப்பையில் இருந்து சேகரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கோயம்பேட்டில் இதெற்கென தனி தொழிற்சாலை நடத்தி வந்த மீனா ஹெல்த்கேர் என்ற மருந்து நிறுவனத்தையும் போலீசார் சுற்றிவளைத்து சீல் வைத்தனர்.
ஆனால், மருந்து நிறுவனத்தின் உரிமையாளர்களான மீனாட்சி சுந்தரம், பிரதீப் சோர்டியா உட்பட நிர்வாகிகள் தப்பியோடி விட்டனர்.
காலாவதி மருந்துகளை வண்டியில் ஏற்றிவந்த டிரைவர் வெங்கடேசன் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவி என்ற இருவர் மட்டும் போலீசிடம் நேற்று சரணடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில், மருந்து நிறுவன அதிபர்களில் ஒருவரான பிரதீப் சோர்டியாவை போலீசார் கைது செய்தனர்.
காலாவதியான மருந்து விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த இவரை போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் இம்மோசடி விவகாரம் வெடித்த உடனடியாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற கும்பல் இருந்தால் கண்டுபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பல இடங்களில் பீதியடைந்த மருந்து கடைக்காரர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள காலாவதி மருந்துகள் அனைத்தையும் குப்பையில் கொட்டியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.
வேலூரில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் நகரின் பல்வேறு இடங்களில் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் போலி மருந்துகள் என தெரியவந்துள்ளது. வேலூர் எல்.ஐ.சி. காலணி, வேலூர் பைபாஸ் சாலை, பாலாற்றங்கரை என மூன்று இடத்தில் போலி மருந்துகளை கொட்டி எரிந்துள்ளனர்.
இன்று காலை அவை பாதி எரிந்தும், எரியாமலும் கிடந்தை போலீசார் கண்டுபிடித்தனர். போலி மருந்துகளை எரித்தது யார் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலி மருந்துகள் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், எரித்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதேபோல் நெல்லையிலும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் ரோடடில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை ஜங்ஷன் பெருமாள் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி பகுதிகளில் மருந்து மொத்த விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. மாநிலம் முழுவதும் சோதனை நடத்தப்படுவதை அறிந்த விற்பனையாளர்கள் காலாவதியான மருந்துகளை தெருவில் கொட்டியுள்ளனர்.
பெட்டி, பெட்டியாக மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள், டானிக்குகள் கொட்டப்பட்டுள்ளன. பெரும்பாலானவை 2009ம் ஆண்டு காலாவதியானவை ஆகும்.
இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. ரோட்டில் கொட்டப்பட்டுள்ள மருந்துகளை மாநகராட்சி துப்பரவு பணியாளர் லாரியில் எடுத்து சென்றனர்.
மருந்து நிறுவன அதிபர் விமான நிலையத்தில் கைது
மார்ச் 26, 2010
காலாவதி மருந்து மோசடியில் கைதாகியுள்ள பிரதீப் சோர்டியா.
சென்னை, மார்ச் 25: காலாவதியான மருந்துகளில் தேதிகளை திருத்தி மறுவிற்பனைக்கு அனுப்பிய மோசடி தொடர்பான வழக்கில் தலைமறைவான மருந்து விற்பனை நிறுவன அதிபர் பிரதீப் சோர்டியாவை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நெல்லையில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்
மார்ச் 26,2010
திருநெல்வேலி:நெல்லையிலும் காலாவதியான மருந்துகள் தெருக்களில் கொட்டப் பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.சென்னையில் காலாவதியான மருந்து நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மருந்து மொத்த சப்ளை நிறுவனங்கள், மெடிக்கல் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் சோதøனைகள் நடத்தப்படுகின்றன.
நெல்லையில் 500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ளன.நெல்லை ஜங்ஷன் வரதராஜ பெருமாள் கோவில், கண்ணம்மன் கோவில் தெரு, பெரிய தட்டார்குடி தெரு ஆகிய தெருக்களில் மருந்துகளின் மொத்த ஏஜன்சிகள் உள்ளன. இவற்றில், அதிகாரிகள் சோதனை நடத்துவர் என்ற தகவல் இருந்ததால், மருந்து நிறுவனங்கள் தாங்களாகவே குப்பை தொட்டிகளில் மருந்துகளை கொட்டினர். மருந்து பாட்டில்கள் குப்பையில் கிடந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அப்துல் காதர் கூறுகையில், 'நெல்லையில் காலாவதியான மருந்துகளை சப்ளை செய்ததாக தகவல் இல்லை. இருப்பினும், துறை அதிகாரிகள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். வழக்கமாக மருந்து விற்பனை செய்யும் ஏஜன்சிகள், காலாவதியான மருந்துகளை தங்கள் நிறுவனங்களுக்கே அனுப்பி விடுவர்.
அப்படி அனுப்பாதவற்றை பயந்து போய் தெருக்களில் கொட்டியுள்ளனர்.மேலும், பெனட்ரைல் இருமல் மருந்து, கார்பேஸ் எனப்படும் ரத்தக் கொதிப்பு மாத்திரை, வி நர்வ் என்னும் சத்து மாத்திரைகளை சோதனை நடத்துமாறு சென்னை அதிகாரிகள் தெரிவித்தனர். அவைகள் உண்மையான மருந்துகளா எனவும் சோதனை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்:சுகாதார செயலர் சுப்புராஜ் விளக்கம்
மார்ச் 26,2010
சென்னை:காலாவதி மருந்து விவகாரத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்,'' என, சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.சென்னையில் காலாவதியான மருந்துகள், மீண்டும் விற்பனைக்கு வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாகியுள்ளது.
மருந்துக் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று, 'இது காலாவதியான மருந்தா?' என, கேட்டு வாங்கி வருகின்றனர். மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள காலாவதியான மருந்துகளை குப்பையில் கொட்டி அழித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் தமிழக சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் சார்பில் கடந்தாண்டில் மருந்துக் கடைகள், தயாரிப்பு நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு 20 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. தொடர்ந்து ரெய்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.காலாவதியான மருந்துகள் பிடிபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தற்போது பீதியடைந்துள்ளனர். தமிழகத்தில் 42 ஆயிரத்து 500 மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை மையங்கள் உள்ளன.
மருந்துக் கடைகள் இதில் அதிகம்.சேலத்தில், காலாவதியான மருந்துகளை மருந்து விற்பனை மையங்களை சேர்ந்தவர்கள், குப்பையில் கொட்டி அழித்து மேலும் பீதியை ஏற்படுத்தியுள் ளனர். சட்டப்படி மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் இருக்கத் தான் செய் யும். அவற்றை அழிப்பதற் கென வழிமுறைகள் உள்ளன.
காலாவதியான மருந்துகளை கடைக்காரர்கள், 'இது விற்பனைக்கல்ல' என குறிப்பிட்டு தனியாக வைத்திருக்க வேண் டும். இந்த மருந்துகளை மொத்த விற்பனையாளர்களிடம் அளித்தால் அவர்கள் உற் பத்தியாளர்களிடம் அனுப்பி விடுவர்.மருந்து உற்பத்தியாளர்கள் இவற்றை உரிய முறையில் அழித்து விடுவர்.
காலாவதியான மருந்து இருக்கிறது என்பதற்காக மருந்து கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியாது.
காலாவதி மருந்துகள் கடையில் இருந்தால் அதை குற்றம் என கருதி விடவும் முடியாது. எனவே, மருந்துகள் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. இது போன்ற குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தற் போது உத்தரவிடப்பட்டுள் ளது. முன்பெல்லாம் தண்டனையும், அபராதமும் மிகக் குறைவாக இருந்தது. கடந் தாண்டு ஆகஸ்ட் முதல் 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய தண்டனை.
காலாவதி மருந்துகளை மீண் டும் விற்பனைக்கு விடுபவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மருந்துக் கடைகள் வளர்ந்த அளவிற்கு மருந்து கட்டுப் பாட்டுத்துறை வளரவில்லை. அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. தற்போது மருந்து ஆய்வாளர்கள் 50 பேர் உள்ளனர். மேலும், 25 பேரை புதிதாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் மருந்துகளில் உள்ள காலாவதி விவரத்தை பார்த்து வாங்குவதில்லை.
சமீபத்திய நிகழ்வுக்குப் பின் தற்போது அனைவரது மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது.துறையின் சார்பில் தற்போது மொத்த விற்பனையாளர்கள், மருந்து தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களுக்கான வழிமுறைகள், விதிகள் குறித்து விளக்கியுள்ளோம். மருந்துக் கடைகளில் பார்மசி படித்தவர் கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.ஆனால், யாரும் நியமிப்பதில்லை. இதுகுறித்தும் அவர்களிடம் வலியுறுத்தப்படும்.
மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்களுக்கு குற்றம் செய்தவர்களை கைது செய்யும் அதிகாரம் இல்லை. இது தொடர் விவகாரத்தில் வேறு சில மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் துறை அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்தார்.
ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுங்கள்:மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறும்போது,காலாவதி மருந்துகள் விற்பனை விவகாரத்தில் ஒரு கும்பலே இணைந்துசெயல்பட்டுள்ளது.இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் சிக்கவில்லை. போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர். மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் மேலும் தொடரும். இது குறித்து பொதுமக்கள் 044-2433 8421 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.
காலாவதியான மருந்து விற்பனை மோசடி, முக்கிய நபர் நீதிமன்றில் சரண்.
மார்ச் 26, 2010
சென்னை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருப்பது, காலாவதியான மருந்துகள் விற்பனை மோசடி. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே ஏழுபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மீனா ஹெல்த் கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
ஓராண்டில் பலகோடி காலாவதி மருந்துகளை கடத்தினேன்: டிரைவர் வாக்குமூலம்
மார்ச் 26 2010
‘கடந்த ஓராண்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகளை சப்ளை செய்தேன்’ என்று டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காலாவதியான மருந்துகளை சப்ளை செய்ததாக தேடப்பட்டு வந்த டிரைவர் வெங்கடேசன், ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் கொடுங்கையூர் போலீசார் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் வெங்கடேசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
பெங்களூரில் உள்ள ‘கிரான்டிக்ஸ்’ நிறுவனத்தின் கிளை பூந்தமல்லியில் உள்ளது. அந்த நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வருகிறேன். காலாவதியான மருந்து,மாத்திரைகளை வேன்களில் ஏற்றி கொடுங்கையூரில் மருந்து அழிக்கும் இடத்துக்கு கொண்டு செல்வேன். அதற்காக எனக்கு 4 ஆயிரம் ரூபாயை கம்பெனி கொடுக்கும்.
வாரத்துக்கு ஒரு முறை இந்த லோடுகளை ஏற்றி செல்வேன். அப்போது மருந்துகள் வைக்கப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளை கொடுங்கையூரை சேர்ந்த ரவி என்ற பிரபாகரன் வாங்கி வந்தார். மருந்துகளை அழிக்க அவரும் உதவி செய்வார். அதற்காக ஒரு வேனுக்கு 1000 ரூபாயை ரவிக்கு கொடுப்பேன். கடந்த ஓராண்டுக்கு முன்பு சேகர், பாஸ்கர் ஆகியோர் எங்களை அணுகி காலாவதி மருந்துகளை கொடுத்தால் ஒரு லோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்தனர்.
வீணாக போகும் மருந்தை யாருக்காவது கொடுத்தால் அவர்களுக்கு பயன்படட்டும் என்பதற்காக மருந்துகளை கொடுத்தேன். எனக்கு கொடுக்கும் 10 ஆயிரத்தில், ரூ.4 ஆயிரத்தை ரவிக்கு கொடுப்பேன். ரவி, அவரது மனைவி மற்றும் ஜானி பாஷா ஆகியோர் நான் கொண்டு வரும் மருந்துகளை வேறு வாகனங்களில் ஏற்றி அனுப்புவார்கள்.
ஓராண்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை சப்ளை செய்துள்ளேன். இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது எனக்கு தெரியாது. காலாவதி மருந்துகளை சாப்பிட்டால் தீமைகள், பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் தெரியாது.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் வெங்கடேசன் கூறியுள்ளார்.
மேலும் மருந்துகள் எப்படி கடத்தப்பட்டது என்பது பற்றி போலீசாரிடம் வெங்கடேசன் நடித்து காட்டினார்.
காலாவதி மருந்து மோசடியில் டாக்டர்களும் கைதாக வாய்ப்பு?
மார்ச் 27, 2010
சென்னை, மார்ச் 26: காலாவதி மருந்து மோசடியில் பல பகுதிகளில் உள்ள டாக்டர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உற்பத்தி செய்யப்படும் மருந்து, மாத்திரைகள் உரிய காலத்துக்குள் விற்பனையாகததால் அவை காலாவதியாகிவிடுகின்றன.
மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி, காலாவதி மருந்து, மாத்திரைகளை அழிக்கும் நிறுவனங்களிடம் அந்த மருந்துகளை ஒப்படைத்து அழிக்க வேண்டும்.
ஆனால், பல சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் கம்பெனிகள், அவற்றை ஒப்படைப்பது கிடையாது. மாறாக, காலாவதியாகும் மருந்துகளைச் சேகரித்து, அவற்றின் உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றைத் திருத்தி, மறு விற்பனைக்கு அனுப்பி மோசடி செய்தது அண்மையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் போலீஸôரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலாவதி மருந்து மோசடி தொடர்பாக மருந்து, மாத்திரைகளில் தேதிகளை திருத்தியவர்கள், அவற்றை இருப்பு வைத்தவர்கள், விநியோகித்தவர்கள் என 2 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்களிடம் நடைபெறும் விசாரணையில், மருந்து மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன.
மருந்து மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனம், அதிக பிரபலம் இல்லாத பல சிறிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஸ்டாக்கிஸ்ட் உரிமையைப் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம், காலாவதியான மருந்துகளை கடைகளுக்கு மட்டுமின்றி டாக்டர்கள் பலருக்கும் விநியோகித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மருத்துவமனைகளில், சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்காக வருபவர்களிடம் டாக்டர்கள், சீட்டுகளில் வரிசையாக மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதும், நோயாளிகளிடம் கூடுதல் தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களே மருந்து, மாத்திரைகளை கொடுப்பதும் அதிகமாக உள்ளது.
டாக்டர்கள், வேளை வாரியாக பிரித்து கொடுப்பதால் மாத்திரைகள் குறித்த சந்தேகம் ஏற்படுவது கிடையாது.
இந்த மருந்து மோசடியில் மருந்து விற்பனையாளர்களை மட்டும் குறி வைக்காமல், சிறிய அளவிலான மருத்துவமனைகளையும், டாக்டர்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று மருந்து விற்பனையாளர்கள் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
விசாரணையில்...: மோசடி தொடர்பாக காவலில் உள்ளவர்களிடம் நடைபெற்று வரும் விசாரணையில் இதில் டாக்டர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன.
இத் தகவல்கள் தொடர்பான மேல் விசாரணையின் அடிப்படையில் இதில் தொடர்புள்ள டாக்டர்கள் மீது போலீஸôரின் நடவடிக்கை இருக்கும் என போலீஸôர் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் டாக்டர்களும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!
மார்ச் 27, 2010
சென்னை: காலாவதியான மருந்து, மாத்திரைகளை புதியது போல மாற்றி விற்கப்படும் மோசடி [^] அம்பலமானதை அடுத்து, பொதுமக்கள் மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மருந்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.
மருந்துகள் வாங்கியதற்கு கடைக்காரர்களிடம் இருந்து ரசீது கேட்டுப் பெற வேண்டும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.
மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் [^] செய்ய வேண்டும்.
மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.
மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும். மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.
மற்றவர்களுடைய நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.
மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம்.
அல்லது 044 24338421, 24328734, 24310687, 24351581 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விளங்கங்கள் பெறலாம் என மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.
மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும்
இதற்கிடையே, காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீதான அரசின் நடவடிக்கை தொடரும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதுபற்றி குறிப்பிடுகையில்,
'காலாவதியான மருந்துகள் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் இது குறித்த அரசின் நடவடிக்கை தீவிரமாக தொடரும்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காலாவதியான மருந்துகளை வைத்திருக்கும் மருந்துக் கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள மருந்துகளை ஓரிடத்தில் வைத்து அதில் விற்பனைக்கு அல்ல என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அந்த மருந்துகளை அந்தந்த மருந்து நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். இந்த விவகாரம் குறித்து மருந்து விற்பனையாளர்களும் பயப்படத் தேவையில்லை' என்றார்.
மேற்கண்டவற்றை படித்து உங்களுக்கு விவகாரமாக எதாவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
மறக்காம வோட்டுப் போடுங்க